முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மன் பயணம்: ரூ.3201 கோடி தொழில் முதலீடு ஒப்பந்தம்: தமிழக அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 31 அன்று அந்நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பில் உரையாற்றினார்.

அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 01ந் தேதி டசெல்டோர்ஃப் நகரில் Knorr Bremse. Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழகத்தில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதை தொடந்து, ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார் பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டம் தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நார் பிரெம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா, துணைத் தலைவர் ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுத்திட்ட்டுள்ளனர். மேலும்,  உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட நார்டெஸ் குழும நிறுவனத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில் மயமாக்கலில் தமிழகத்தின் தலைமையை வலுப்படுத்த உதவும். 

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நார்டெஸ் குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்,  மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழகத்தில் அதன் உற்பத்தியை அடுத்த 05 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் திரிபாதி கையெழுத்திட்டார். 

மேலும், ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.

இது தமிழகத்தில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் வினோத் பாண்டே ஆகியோரை முதல்வர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government announces that industrial investment agreements worth Rs 3201 crore have been signed during Chief Minister MK Stalin visit to Germany


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->