தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு..!
Tamil Nadu Fish Food Festival 2025 Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurates
“தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025” தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் 30.05.2025 முதல் 01.06.2025 வரை 03 நாட்களாக நடைபெறவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, அ.வெற்றியழகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் ந.கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, தேசிய மீன்பிடி மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாகி பிஜய் குமார் பெஹரா உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்களின் முன்னேற்றத்திற்காக திருவெற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் மீன் அங்காடி, சிந்தாதிரிப்பேட்டை புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி உள்பட பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் அமைத்தல், மீன் இறங்கு தளங்கள், கூடுதல் படகு அணையும் தளம், படகு பழுதுபார்க்கும் தளம், அலை தடுப்புச் சுவர் அமைத்தல், தூண்டில் வளைவு அமைத்தல் என ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, பொதுமக்கள் மீன் உணவு வகைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு மீன் உணவு திருவிழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க சென்னை தீவுத்திடலில் 1,00,000 சதுர அடி பரப்பளவுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50 அரங்கங்கள் கொண்ட சென்னை கடல்மீன் உணவு காட்சி கூடாரம். 15 அரங்கங்களுடனான மீன்வளம் மற்றும் வண்ணமீன்கள் காட்சிக்கூடாரம், 20 அரங்கங்களுடனான மீன் உணவு கூடங்கள் மற்றும் செயல்விளக்க கூட்ட அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, சமயற்கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. அத்துடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும்மீன்களில் உள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
English Summary
Tamil Nadu Fish Food Festival 2025 Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurates