ஆவினுக்கு வரத்து சரிவு...! 'விலையை உயர்த்தாவிட்டால் அவ்ளோதான்'... அரசிற்கு விவசாயிகள் காரசார எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொதுத்துறை பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது. ஒருகாலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதன்மை வருவாய் ஆதாரமாக விளங்கிய ஆவின் கூட்டுறவு சங்கங்கள், தற்போது பால் வரத்து குறைவால் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.முன்னதாக, கிராமப்புறங்களில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் தாங்கள் உற்பத்தி செய்த பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு வழங்கி வந்தனர்.

ஆனால் கால்நடை வளர்ப்புக்கான செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தாததால், விவசாயிகள் மாற்று சந்தைகளை நோக்கி திரும்பி வருவதாக கூறப்படுகிறது.தற்போது ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை சராசரியாக ரூ.34-க்கு கொள்முதல் செய்து வருகிறது.

இதே நேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை வழங்குவதால், அதிக வருமானம் கிடைக்கும் நோக்கில் பலரும் தனியார் நிறுவனங்களுக்கே பால் வழங்கி வருகின்றனர்.இதனால், ஆவினுக்கு கிடைக்கும் பால் வரத்து கணிசமாக குறைந்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் பால் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் தெரிவித்ததாவது,"கடந்த காலங்களில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மாடுகள் வளர்க்கப்பட்டன. இயற்கையான மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததால், கால்நடைகளை காலை மேய்ச்சலுக்கு அனுப்பி மாலையில் திரும்ப அழைத்து வந்தாலே போதுமானது.

பசுந்தீவனம் வாங்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது. வறட்சி காலங்களில் வீட்டில் சேமித்து வைத்த வைக்கோல், சோளத்தட்டை, குறைந்த அளவு தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை உணவாக வழங்கினாலே கால்நடைகளை பராமரிக்க முடிந்தது.ஆனால் தற்போது மேய்ச்சல் நிலங்கள் வேகமாக குறைந்துவிட்டன. இதனால் பெரும்பாலான தீவனங்களை சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பசுந்தீவனம் கிடைக்காத நேரங்களில் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களையே முழுமையாக நம்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.தற்போது 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை புண்ணாக்கின் விலை ரூ.1,800 வரை உயர்ந்துள்ளது. இதனால் மாடுகளை பராமரிக்கும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் ஒரு லிட்டர் பாலை ரூ.34-க்கு ஆவினுக்கு வழங்குவதால் எந்தவித லாபமும் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக பலர் கால்நடை வளர்ப்பையே கைவிட்டு வருகின்றனர். மேலும், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.50 வரை வழங்குவதால், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் அங்குதான் பாலை விற்பனை செய்ய விரும்புகின்றனர்.அதுமட்டுமின்றி, வீடுகளுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்தால் ஒரு லிட்டர் பாலை ரூ.60 முதல் ரூ.62 வரை விற்பனை செய்ய முடிகிறது.

இதனால் கூட்டுறவு சங்கங்கள் வழியாக ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.இதனுடன், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள், மாடுகள் உயிரிழப்பது, பால் உற்பத்தி குறைவது போன்ற காரணங்களும் பால் வரத்து சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

தனியார் நிறுவனங்கள் வழங்கும் கொள்முதல் விலைக்கு இணையாக ஆவினும் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே விவசாயிகள் மீண்டும் கூட்டுறவு சங்கங்கள் வழியாக பால் வழங்க ஆர்வம் காட்டுவார்கள். இல்லையெனில் ஆவினுக்கு பால் வரத்து மேலும் குறையும் அபாயம் உருவாகும்" என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supply declining If price not increased that what happens Farmers verbal warning government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->