உஷார் மக்களே...! இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்...! - மின்வாரிய பெயரில் அரங்கேறும் புதிய சைபர் மோசடி...!
power supply disconnected tonight new cyber fraud being carried out name Electricity Board
“மின் கட்டணம் செலுத்தப்படவில்லை; இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என மின்சார வாரியம் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பி பொதுமக்களை குறிவைத்து புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருகிறது. இதுபோன்ற போலி குறுஞ்செய்திகளை நம்பி பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழந்துவிட வேண்டாம் என காவலர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

மின் கட்டணம், வங்கி பரிவர்த்தனை, கைப்பேசி இணைப்பு என பொதுமக்களின் அன்றாட தேவைகளை மையமாக வைத்து, அவசரப்படுத்தி பணம் பறிப்பதும், ரகசிய தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் கைப்பேசிக்கு சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
மின்சார வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்டதுபோல் இருந்த அந்த செய்தியில், அவரது முந்தைய மாத மின் கட்டணம் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அதனால் இரவு 9.45 மணிக்கு பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், உடனடியாக குறிப்பிட்ட ஒரு கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மின் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் உரிய காலக்கெடுவுக்குள் தவறாமல் செலுத்தி வரும் அந்த ஊழியருக்கு, திடீரென வந்த இந்த தகவல் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்புகொண்டு, ஏற்கனவே மின் கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.மேலும், கடந்த 2 மாதங்களில் செலுத்திய மின் கட்டணங்களின் விவரங்களையும் அவர்களுக்கு அனுப்பினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், மின் கட்டண விவரத்தை புதுப்பிப்பதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நபர் கூறியுள்ளார்.இதனை நம்பிய அந்த ஊழியர், மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண் என்ற எண்ணத்தில் அவருடன் தொடர்ந்து பேசினார்.
அப்போது, மின்சார கட்டணத்தை புதுப்பிப்பதாக கூறி மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்முனையில் இருந்தவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே சந்தேகம் ஏற்பட்டதால், கொட்டிவாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் எம். பாலசுந்தரியை அந்த ஊழியர் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.
அப்போது, மின்சார வாரியம் சார்பில் இதுபோன்ற எந்த குறுஞ்செய்தியும் நுகர்வோருக்கு அனுப்பப்படவில்லை என்பதை உதவி பொறியாளர் தெளிவுபடுத்தினார்.மேலும், இது சைபர் மோசடி கும்பலின் செயலாக இருக்கக்கூடும் என்பதால், உடனடியாக அந்த தொடர்பை துண்டித்துவிடுமாறு எச்சரித்தார்.
இதையடுத்து அந்த ஊழியர் உடனடியாக கைப்பேசி தொடர்பை துண்டித்தார்.உதவி பொறியாளரின் துரிதமான எச்சரிக்கையால் அந்த ஊழியர் பெரும் ஆபத்தில் இருந்து தப்பினார். குறிப்பாக, அவரது பணம் பறிபோகாமல் மட்டுமின்றி, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கைகளில் சிக்குவதும் தடுக்கப்பட்டது.
சம்பவத்தை தொடர்ந்து அந்த ஊழியர், உடனடியாக சைபர் குற்றப்பிரிவின் உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.அப்போது பேசிய அதிகாரிகள், மின் கட்டணத்தை புதுப்பிப்பதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
மின்சார வாரியம் தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ளும் சைபர் குற்றவாளிகள், அவற்றை பயன்படுத்தி நுகர்வோருக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அவசரப்படுத்தும் குறுஞ்செய்திகள், கைப்பேசி அழைப்புகள் அல்லது இணையதள தொடர்புகள் வந்தால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமான எந்த தொடர்புக்கும் தனிப்பட்ட விவரங்கள், வங்கி தகவல்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்டவற்றை வழங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சைபர் குற்றப்பிரிவின் இணையதளத்தில் புகார் பதிவு செய்த பின்னரும் அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
English Summary
power supply disconnected tonight new cyber fraud being carried out name Electricity Board