தந்தை மறைந்த நிலையிலும் பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவிகள்: நேரில் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..!
Students wrote the public examination and passed with high marks despite their father death Udhayanidhi Stalin personally praised them
தந்தையர் மறைந்த நிலையிலும் பொதுத்தேர்வினை எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அத்துடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி கௌரவித்துள்ளார்.
2024-2025 ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு நேரத்தில் திருச்சி மாவட்டம் கருங்குளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற பி. சத்யபிரியா என்ற மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக 10.3.2025 அன்று இரவு இறந்து விட்டார். தந்தையார் மறைந்த நிலையில் 11.3.2025 அன்று நடைபெற்ற கணிதத் தேர்வினை எழுதியதுடன், கணிதத்தில் 79 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 528 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலாவதாகவும் வந்துள்ளார்.

அடுத்ததாக, 2024-2025 ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு நடைபெற்றபோது திருச்சி மாவட்டம் தேனேரிப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்ற ச.சாலினி என்ற மாணவியின் தந்தையும் மாரடைப்பு காரணமாக 12.03.2025 அன்று இரவு இறந்து விட்டார். இந்நிலையில் 13.3.2025 அன்று நடைபெற்ற கணினி அறிவியல் தேர்வினை எழுதியதுடன், அதில், 78 மதிப்பெண்களுடன், மொத்தம் 367 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருச்சிராப்பள்ளிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் இன்று (25.5.2025) திருச்சிராப்பள்ளியில் இந்த இரண்டு மாணவிகளும் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை பாராட்டி, கேடயங்களை வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோ.வி.செழியன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ண பிரியா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Students wrote the public examination and passed with high marks despite their father death Udhayanidhi Stalin personally praised them