கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை.. ஜவாஹிருல்லா MLA வலியுறுத்தல்!
Strict action is needed against those who incite violence MLA Jahawirullas insistence
அற வழியில் போராடும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பிற்கு எதிராகக் கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா MLA கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மதுரையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாகவும் இந்து முன்னணி நடத்திய மதுரை மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக் கலவர அரசியல் பேசியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் முறையாகக் காவல் துறை அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற விருந்த நேரத்தில் அதே இடத்தில் இந்து முன்னணி அமைப்பினரும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர்.
கடும் மழையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் தொடங்குகின்ற நேரத்தில் திடீரென இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வன்முறையைத் தூண்டும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களைத் தாக்கும் நோக்கில் வந்துள்ளனர். காவல் துறை தலையிட்டு பெரும் கலவரத்தைத் தடுத்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகை திருவள்ளுவன், மீ த. பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் திரளோடு நடந்தேறியிருக்கிறது.
கலவரம் செய்யும் நோக்கில் வந்த 50-க்கும் மேற்பட்ட பாசிசக் கும்பலைக் காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் கைது செய்தவர்களைச் சிறையில் அடைக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது சரியான அணுகுமுறை அல்ல. திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை இரக்கம் காட்டக் கூடாது.
பாசிசத்தை எதிர்த்து நிற்கும் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்குப் பதிலாக திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம் என்று கூறி வரும் சங்பரிவார அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா MLA கோரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
Strict action is needed against those who incite violence MLA Jahawirullas insistence