தமிழக கடற்கரையில் புயல் அச்சம்! 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
Storm threat on Tamil Nadu coast Warning pole number one raised in 9 ports
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து விட்டதால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மழையால் பல இடங்களில் நதி, குளங்கள் நிரம்பி வழியும் நிலை உருவாகியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, இன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் வலுவடையும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், வரும் 27-ந்தேதி காலை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த அமைப்பு முழுமையாக புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பெயராக “மோன்தா” என அழைக்கப்பட உள்ளது. தாய்லாந்து நாடு பரிந்துரைத்த இந்த பெயர், “மணம் வீசும் மலர்” என்ற அர்த்தம் கொண்டது.
புயல் உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை ஆய்வு மையம் 9 துறைமுகங்களில் ‘ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு’ ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தற்போது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
English Summary
Storm threat on Tamil Nadu coast Warning pole number one raised in 9 ports