மாநில அந்தஸ்து தேவை..குடியரசு துணை தலைவரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் அதிகாரமின்றி தவிப்பதாகவும், புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரத்தையும், சுற்றுலா மற்றும் தொழிற்துறை வளர்ச்சியையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் வகையில், முதல்வர் ரங்கசாமி, குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டிய நீண்ட நாள் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மக்களுக்கான தனது பொறுப்புகளை நிறைவேற்ற தேர்தல் மூலம் உருவாக்கப்படும் அரசு, கட்சி பாகுபாடின்றி கடந்த காலங்களில் உருவான அனைத்து அரசுகளும் மத்திய அரசிடம் தொடர்ந்து மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியதைக் கோரியுள்ளன. புதுச்சேரி சட்டசபையும் அனைத்து கட்சிகளின் ஒற்றுமையான ஆதரவுடன் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் நலனும், அதைவிட முக்கியமாக புதுச்சேரி மக்களின் விருப்பமும், யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஒரு வரையறுக்கப்பட்ட அரசு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இது அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டதல்ல, ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள "யூனியன் பிரதேசங்கள் சட்டம்" எனப்படும் நாடாளுமன்ற சட்டத்தின் காரணமாகவே இவ்வாறு உள்ளது. அமைச்சரவை மற்றும் சட்டசபை ஆகியவற்றுடன் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருந்தாலும், அமைச்சரவை மட்டத்தில் அதிகாரமின்மையால் விரைவாக வளர்ச்சிச் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் தவிக்கிறது. சட்டசபை கொண்டுள்ள‌ புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி ஆணையத்தால் ஒன்றிய பிரதேசமாகவே கருதப்பட்டு, நிதி பங்கீட்டில் சரிவர சேர்க்கப்படுவதில்லை. இதனால் வளர்ச்சிக்கு தேவையான நிதி வழங்கல் சரிவர அமையவில்லை.

ஆகையால் மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கப்பட்டால், தற்போதுள்ள நிதிப் பகிர்வுமுறை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1500 - ரூ.2000 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறும் வாய்ப்பு உள்ளது. இது விரைவாக வளர்ந்து வரும் சுற்றுலா மையமாக புதுச்சேரியை மேம்படுத்த தேவையான புவியியல் கட்டமைப்புச் செயற்திட்டங்களுக்கு பெரிதும் பயன்படும்.

யூனியன் பிரதேசமாக இருந்ததால், தொழிற்துறை வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாமல் போகிறது. இது வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. எனவே, மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை உயர்மட்டங்களில் எடுத்துச்சென்று விவாதிக்குமாறு மாண்புமிகு குடியரசுத் துணை ஜனாதிபயிடம் நான் மனமுவந்த கோரிக்கையிடுகிறேன். இது புதுச்சேரியின்‌ மக்களின் வாழ்க்கை தரத்தையும், சுற்றுலா மற்றும் தொழிற்துறை வளர்ச்சியையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

State status is required Chief Minister Rangasamys insistence to the Deputy Speaker of the Republic


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->