ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள்!கலர் கலரா திட்டத்திற்கு பெயர் வைத்தால் மட்டும் போதாது! கொந்தளித்த அண்ணாமலை!
Stalin with you petitions floating in the river Just naming the Kala Kalara project is not enough Annamalai in turmoil
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. சாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், நிலப் பத்திரம் போன்ற பொதுமக்களுக்கு தேவையான எந்தவித ஆவணமாக இருந்தாலும், உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்தால், 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் பேரில், மாநிலம் முழுவதும் இந்த முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 21 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற்றன. அங்கு மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர். 45 நாளுக்குள் அவை பரிசீலிக்கப்பட்டு தீர்வு கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் பாதுகாப்பாக வைக்கப்படாமல், திருப்புவனம் வைகை ஆற்றில் மிதப்பதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக திருப்புவனம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலையாரி உள்ளிட்டோர், ஆற்றில் மிதந்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம், மனுக்கள் அளித்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நம்பிக்கையுடன் அளித்த கோரிக்கைகள், அலட்சியத்தால் குப்பை போல வீசப்பட்டுவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக ஆர்வலர்கள், “அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்களின் குறைகள் வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதை பகிர்ந்த அதிமுக–பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பதிவில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“திட்டங்களுக்கு கவர்ச்சியான பெயர்களை சூட்டுவது, மக்களின் வரிப்பணத்தை விளம்பரத்திற்காக வீணடிப்பது – இவை எல்லாம் திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்டன. சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் உண்மை நிலை, வைகை ஆற்றில் மிதந்த மனுக்களால் வெளிப்படையாகி விட்டது. கடந்த 4 ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாக்கடையில் போய்விட்டன. இன்று மக்களின் குறைகளும் குப்பைகளாக வீசப்படுகின்றன.”
என்று அவர் கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.இந்தச் சம்பவம், அரசின் திட்ட முகாம்களின் செயல்பாடு மற்றும் அதன் நம்பகத்தன்மையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Stalin with you petitions floating in the river Just naming the Kala Kalara project is not enough Annamalai in turmoil