தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விவகாரம் - தெற்கு ரெயில்வே விளக்கம்.!!
south railway explain school van overturn issue
நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோ.பூவனூர் ரெயில்வே கேட் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களுடன் சென்றது. அதன் படி இந்த வேன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே கேட் அருகே இருந்த தடுப்புக்கட்டையில் மோதி தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ஓடி வந்து வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தும், ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே சிக்கி இருந்த பள்ளி மாணவர்களை மீட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தண்டவாளத்தில் கவிழ்ந்த வேனை, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கி நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "கடலூர் மாவட்டம் பூவனூரில் நேற்று காலை 7.57 மணிக்கு தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது வேன் ஓட்டுநர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வேனை இயக்கியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும், கவனகுறைவாக வாகனத்தை இயக்கிய வேன் ஓட்டுநர் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். விபத்து நடந்த தண்டவாளத்தின் இருபுறமும் வேகத்தடைகள் மற்றும் முறையான எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் ரெயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மேலும், ரெயில்வே உபகரணங்கள் எதுவும் சேதமடையவில்லை. விபத்து நடந்த இடத்தை திருச்சி கோட்ட மேலாளர் ஸ்ரீ பாலக் ராம் நேகி, ரெயில்வே அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். தண்டவாளத்தை கடக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஓட்டுனர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
south railway explain school van overturn issue