பட்டாசு பரிசு பெட்டியில் ரோல் கேப் (பொட்டு வெடி) வைக்க தடை!
sivakasi crackers roll cap issue
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பரிசுப் பெட்டிகளில் கேப் வெடி சேர்க்கக் கூடாது என்று வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மொத்தம் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ள விருதுநகரில், ரூ.300 முதல் பல ஆயிரம் ரூபாய் வரை விலையில் பட்டாசு பரிசுப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. இவை பொதுவாக பூச்சட்டி, பென்சில், புல்லரிகள் போன்ற பலவகை பட்டாசுகளுடன் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், இந்தப் பெட்டிகளில் சிறுவர்கள் பயன்படுத்தும் கேப் வெடி சேர்க்கப்பட்டால் பெரிய அபாயம் ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பட்டாசுகள் பொதுவாக அலுமினியப் பவுடர் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், தீ வைத்தால்தான் வெடிக்கும். ஆனால், கேப் வெடியில் பொட்டாசியம் குளோரைடு போன்ற வேதியியல் பொருள் உள்ளதால் சிறிய உராய்தலுக்கே வெடிவிபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
எனவே, பரிசுப் பெட்டிகளில் கேப் வெடி சேர்க்க வேண்டாம் என்றும், பட்டாசுக் கடைகளில் பரிசுப் பெட்டிகளை நேரடியாகத் தயாரிக்க கூடாது என்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
sivakasi crackers roll cap issue