நீதிமன்றம் சென்ற காலணி…! - தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.59 ஆயிரம் அபராதம்...!
shoe that went court Production company fined 59000
புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த மகி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் நிபின்ராஜ். அவர், தனது உறவினரும் தொழில்முறையில் வக்கீலுமான சஜினாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ஒரு காலணியை ஆர்டர் செய்து பரிசாக வழங்கினார். அந்த காலணியை அணிந்து வழக்கம்போல் நீதிமன்ற பணிக்காக சென்ற வக்கீல் சஜினா, நடுவழியில் எதிர்பாராத விபத்துக்குள்ளானார்.

நீதிமன்ற வளாகத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அந்த காலணி திடீரென இரண்டாக கிழிந்ததால் சமநிலை இழந்து கீழே விழுந்து காயமடைந்தார். இந்த சம்பவம் அவருக்கு உடல் காயம் மட்டுமன்றி, கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, காலணியின் தரக்குறைவு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, வக்கீல் சஜினா புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் விசாரித்தனர். விரிவான விசாரணைக்குப் பிறகு, காலணியை தயாரித்த நிறுவனம் சேவை குறைபாட்டுக்கு பொறுப்புடையது என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, காலணிக்கான தொகையான ரூ.4,547-ஐ வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.
English Summary
shoe that went court Production company fined 59000