நாமக்கல் அருகே கொடூரம்: 15 வயது சிறுமியைச் சீரழித்த ஜேசிபி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
Shocking POCSO Case in Namakkal JCB Driver Arrested for Assault of a Minor
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, நான்கு மாத கர்ப்பிணியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திடுமல் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (22) என்ற இளைஞரை போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். அவரது பெற்றோர் பள்ளிக் கட்டட வேலைக்காகப் பல்லடம் சென்றிருந்தபோது, அங்கு ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த சக்திவேலுடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழியைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு நாமக்கல் வந்த சிறுமியை, சக்திவேல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்துச் சிறுமி தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரைத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதைக் கேட்டு நிலைகுலைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது சக்திவேல் செய்த அநீதி வெளிச்சத்திற்கு வந்தது.
மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சக்திவேலைத் தேடிப் பிடித்த போலீஸார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சக்திவேல், நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Shocking POCSO Case in Namakkal JCB Driver Arrested for Assault of a Minor