முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்த விமர்சனம்: அண்ணாமலைக்கு அமைச்சர் மரியவில்சன் பதிலடி!
Minister Maria Wilson Counters Annamalai Criticism Over CM Vijay London Trip
சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரியவில்சன், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் அளித்துப் பேசினார்.
முன்னதாக, "முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது பழைய காலத்து அரசியல் பாணி. லண்டன் போன்ற பொருளாதார வளர்ச்சி குறைவான இடங்களுக்குச் செல்வதை விடுத்து, உள்ளூர் தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கலாம்" என்று அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மரியவில்சன், "அண்ணாமலையை ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என்று நினைத்தேன்; ஆனால் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தை அவர் இவ்வாறு விமர்சிப்பது ஏற்புடையதல்ல. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கக் கிடைக்கும் சிறிய முதலீடுகளைக் கூட நாம் விட்டுவிட முடியாது. முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கேலி கிண்டல் செய்வது நல்ல அரசியலல்ல. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையிடம் இருந்து இத்தகைய முதிர்ச்சியற்ற பதிலை நான் எதிர்பார்க்கவில்லை" என்று சாடினார்.
மேலும், "தற்போது தமிழ்நாட்டில் எவ்வித ஊழலுக்கும் இடமன்றி வெளிப்படையான மற்றும் தூய்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு உரிய வரிகள் அனைத்தும் முறைகேடுகள் இன்றிச் சரியாக வசூலிக்கப்பட்டு மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
English Summary
Minister Maria Wilson Counters Annamalai Criticism Over CM Vijay London Trip