'இசை இறைவன்! தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு உலக அடையாளம்': இளையராஜாவுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து..!
Seeman visits musician Ilayaraja and wishes him on his birthday
இசைஞானி இளையராஜா தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளதாவது:
இசை இறைவன்! தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு உலக அடையாளம்!
எங்கள் ஐயா இளையராஜா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று 02-06-2025 ஐயாவின் சென்னை தி.நகர் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த இனிய தருணத்தில், இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!

தேனி மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் சிற்றூரில் பிறந்து இன்று உலகத்திற்கே இன்னிசை புகட்டும் எங்களது இசை இறைவன்..!
பசியில் கிடந்து பரிதவித்து தனிமையில் தவித்திருக்கும் பொழுதினை, தோல்வியின் வலி துவண்டு இருக்கும் மனிதனை, மனித வாழ்வில் எங்கிருந்தோ வந்து தொற்றும் துயரில் உடைந்து போகும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை,
இசை என்ற இன்ப உலகிற்குள் தனது ராகங்களின் சிறகுகளால் காற்றில் மிதந்தபடி, கை பிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இளையராஜா, மனித உணர்ச்சிகளுக்கு இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்!
தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் இசை என்ற பெரும் ஞானத்தை உலகத்திற்கே போதிக்கும் இசைஞானத்தின் போதிமரம்!
தமிழினத்தின் பெருமைமிக்க உலக அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, இன்னும்... இன்னும்... அவருக்குள்ளாகச் சுரந்துக் கொண்டே இருக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.
ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.. ! என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman visits musician Ilayaraja and wishes him on his birthday