சேலம்: நகைக்காக இரண்டு கொலை... குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!
Salem old women murder case gun fire police
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி அய்யனாரை தனிப்படை போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பிடித்தனர்.
மகுடஞ்சாவடி அருகே தூதனூர், காட்டுவளவு பகுதியிலுள்ள கல்குவாரியில், திங்கள்கிழமை பெரியம்மா (75) மற்றும் பாவாய் (70) ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இருவரின் நகைகளும் பறிக்கப்பட்டிருந்ததால், இது கொள்ளைக்காக செய்யப்பட்ட இரட்டை கொலை என போலீசார் உறுதிசெய்தனர்.
சேலம் எஸ்பி (பொறுப்பு) விமலா உத்தரவின்படி, துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர்கள் செந்தில்குமார், ரமேஷ், சண்முகம் ஆகியோருடன் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் மீது சந்தேகம் வலுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவர் ஒருக்காமலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க, மகுடஞ்சாவடி ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீஸ் குழுவினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தப்பிச் செல்ல முயன்ற அய்யனார், உதவி ஆய்வாளர் கண்ணனின் வலது கையில் கத்தியால் குத்தி ஓட முயன்றார்.
இதைத் தொடர்ந்து போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டதில் அய்யனாரின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் சரிந்தார். உடனடியாக அவர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
English Summary
Salem old women murder case gun fire police