சேலத்தில் ரூ.100 கோடி நிதி மோசடி: போலீசாருக்கு ரூ.48 லட்சம் லஞ்சம்? பரபரப்பு ஆடியோவால் விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சேலம் அம்மாப்பேட்டையில் 'அன்னை தெரசா மனித நேயம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வந்த வேலூரைச் சேர்ந்த விஜயபானு (48), முதலீடு செய்யும் பணத்தை ஓராண்டில் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்தார்.

இதுதொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விஜயபானு மற்றும் மதபோதகர் செந்தில்குமார் உட்பட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு ஜெபக்கூடத்திற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபத்தை உணர்ந்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ஏமாந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் எனக் கூறி 4-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், முதலீடு செய்த பணத்தை மீட்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் விஜயபானு பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "தான் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என்னைச் சந்தித்தார். தன் தம்பி காவல்துறையில் இருப்பதாகவும், வழக்கு ஏதும் வராமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி கூறினார். அதற்காக உயர் அதிகாரிகளுக்குக் கொடுக்க ரூ. 48 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்துள்ளேன்" என்று விஜயபானு பேசுவது போலப் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய ஆடியோவை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் கூறப்பட்டுள்ள லஞ்சப் புகார் உண்மையா மற்றும் இதில் எந்தெந்த அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த சேலம் மாநகர காவல் ஆணையர் ஜோசி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem 100 Crore Financial Scam Leaked Audio Alleges 48 Lakh Police Bribe Amid Rising Protests


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->