ரஷ்யா-உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட தமிழக மாணவர்! மத்திய அரசு மீட்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
Russia Ukraine war TN Student PMK Anbumani Ramadoss
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவர், ரஷ்ய இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் நாட்டுடனான போரில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ரஷ்யாவில் மருத்துவன் படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேர வேலை செய்த போது, தடை செய்யப்பட்ட பொருளை வினியோகம் செய்ததாக அவரும், சக தமிழ் மாணவர் நித்தீஷ் என்பவரும் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது தங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்த அழைத்துச் செல்வதாக பெற்றோருக்கு கிஷோர் அனுப்பியுள்ள செய்தி தான் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிப்புக்காக ரஷ்யா சென்ற மாணவர்களை போரில் ஈடுபடுத்த ரஷ்ய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு இது எதிரானது. ரஷ்யாவின் இந்த செயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி, ரஷ்யாவில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான பெற்றோரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.
ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்கள் 80 பேர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் உள்ளிட்ட மாணவர்களையும் மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Russia Ukraine war TN Student PMK Anbumani Ramadoss