'மகளின் காதலுக்கு எதிர்ப்பு'...! - காதலனுடன் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை...! நடந்தது என்ன...?
Resistance to daughters love Father hacked to death with a sickle conflict with his lover What happened
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொடூரக் கொலையில் முடிந்துள்ளது. மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை, காதலனின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில், அரிவாளால் வெட்டப்பட்ட தந்தை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூனம்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாலகுரு (42). இவர்களது மகள் ஆர்த்தி (23), சித்தாலம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தமிழழகன் (34) என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், மகளின் காதலுக்கு ஈஸ்வரனும் அவரது மனைவியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆர்த்தியைக் கண்டித்தும் வந்ததாகத் தெரிகிறது. இதனால், காதல் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழழகன், ஈஸ்வரனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் ஜன்னல் வழியாகத் தனது கைப்பேசியின் ஒளியைப் பாய்ச்சி உள்ளே பார்த்ததாகக் கூறப்படுகிறது.இதைக் கவனித்த ஈஸ்வரன் உடனடியாக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் தமிழழகன் அங்கிருந்து தனது காரில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரனும் அவரது மனைவி பாலகுருவும் இருசக்கர வாகனத்தில் தமிழழகனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
தமிழழகனின் வீட்டில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஈஸ்வரன் தான் கொண்டு சென்றிருந்த அரிவாளால் தமிழழகனின் தலையில் வெட்டியதாகத் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன், ஈஸ்வரனிடமிருந்த அரிவாளைப் பறித்துள்ளார். பின்னர், அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
ஈஸ்வரனின் மனைவி பாலகுரு அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஈஸ்வரனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால், ஈஸ்வரனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கிடையே, அரிவாள் வெட்டில் காயமடைந்த தமிழழகன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த சம்பவம் பூனம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Resistance to daughters love Father hacked to death with a sickle conflict with his lover What happened