சென்னைக்கு 1,000 ஏசி மின்சார பேருந்துகள் வாங்கும் டெண்டர் ரத்து! தவெக ஆட்சியில் அதிரடி முடிவு.. மீண்டும் எப்போது வரும்?
Tender for the procurement of 1000 AC electric buses for Chennai cancelled A bold decision under the TVK administration when will they be introduced
சென்னையில் 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டரை, நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், உரிய நிர்வாக அனுமதி பெற்று விரைவில் புதிய டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், திட்டத்திற்காகத் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளை வாங்கத் திட்டமிடப்பட்டது. தனியார் பங்களிப்புடன், மொத்த செலவு ஒப்பந்தம் (GCC) அடிப்படையில் இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, டெண்டரைத் திறப்பதற்கான தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு, அந்த டெண்டரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும், அங்கிருந்து தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் பயணிகளுக்கும் இணைப்புப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், 220 ஏசி சிறிய ரக தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக 7 மீட்டர் நீளமுள்ள 70 பேருந்துகள், 5 மீட்டர் நீளமுள்ள 150 பேருந்துகள் என மொத்தம் 220 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்த டெண்டரில் எந்த நிறுவனமும் விண்ணப்பிக்காததால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், தேவையான நிர்வாக ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பே வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். உரிய நிர்வாக அனுமதியைப் பெற்று, அரசாணை வெளியிட்ட பின்னர் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தமிழக பட்ஜெட்டில் ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், 1,000 பேருந்துகளைக் கொண்டுவரும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள 220 ஏசி மின்சாரப் பேருந்துகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
English Summary
Tender for the procurement of 1000 AC electric buses for Chennai cancelled A bold decision under the TVK administration when will they be introduced