பரிதாபமாக முடிந்த மீட்புப் போராட்டம்...! - ஊட்டியில் மீட்கப்பட்ட, தாயைப் பிரிந்து தவித்த புலிக்குட்டி சிகிச்சை பலனின்றி பலி...!
rescue effort that ended tragically tiger cub rescued Ooty separated from its mother dies without treatment
நீலகிரி வனக்கோட்டத்தின் ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆரம்பி பிரிவு அருகிலுள்ள அழகர் மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கடந்த 25-ந் தேதி தாயை பிரிந்து தவித்துக் கொண்டிருந்த இரண்டு புலிக்குட்டிகள் சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஊட்டி வடக்கு வனச்சரகர் ராம்பிரகாஷ் உத்தரவின்பேரில் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அந்த நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பலவீனமான நிலையில் அலைந்துகொண்டிருந்த, பிறந்து ஐந்து மாதங்களே ஆன பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அந்த குட்டிக்கு சென்னை வண்டலூரிலிருந்து வந்த கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு சிகிச்சை வழங்கி வந்தனர்.இதற்கிடையில், காணாமல் போன மற்றொரு புலிக்குட்டியை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதன் விளைவாக, நேற்று முன்தினம் அந்த குட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தற்போது அந்த புலிக்குட்டிக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலில் மீட்கப்பட்ட பெண் புலிக்குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், விதிமுறைகளின்படி எரிக்கப்பட்டது.
மீதமுள்ள மற்றொரு புலிக்குட்டி மேல்சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
rescue effort that ended tragically tiger cub rescued Ooty separated from its mother dies without treatment