ராமநாதபுரம்: பணியில் இருந்தபோது பெண் தலைமைக் காவலர் உயிரிழப்பு — ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் விஜய்!
Ramanathapuram On-Duty Female Police Officer Collapses and Dies CM Vijay Announces 30 Lakh Solatium
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த எம். கண்ணகி (34), பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த பின்னணி:
கடந்த செப்டம்பர் 28 அன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுக்குச் சிகிச்சை பெற வந்த இரு தரப்பினரிடையே இடையே திடீரென மீண்டும் பலத்த மோதல் வெடித்தது. அப்போது மருத்துவமனைப் புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் கண்ணகி, அத்தகராறைத் தடுத்து நிறுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.
அப்போது, மோதலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, அவனைப் பிடிப்பதற்காகக் கண்ணகி உடனடியாகத் துரத்திச் சென்றுள்ளார். அவ்வாறு துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தட்டுத்தடுமாறித் தவறி கீழே விழுந்ததில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலமைச்சரின் இரங்கல் செய்தி மற்றும் நிதியுதவி அறிவிப்பு:
கடமை தவறாது பணியாற்றி உயிர்துறந்த பெண் தலைமைக் காவலர் கண்ணகியின் மறைவு குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பணியின் போது பெண் தலைமைக் காவலர் எம். கண்ணகி அவர்கள் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும். கண்ணகியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உடன் பணியாற்றும் சக காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சலாகச் செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த பெண் தலைமைக் காவலர் கண்ணகியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
English Summary
Ramanathapuram On-Duty Female Police Officer Collapses and Dies CM Vijay Announces 30 Lakh Solatium