ஸ்கூட்டரில் சென்று அதிரடி ஆய்வு...! தியாகராய நகரில் தேங்கிய மழைநீரைப் பார்வையிட்டார் அமைச்சர் எ. ஆனந்த்...!
quick inspection scooter Minister Anand inspected rainwater accumulated Thyagaraya city
சென்னையில் மழைநீர் தேக்கம் தொடர்பாகப் பொதுமக்கள் புகார் அளித்தால், அடுத்த 10 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் எ. ஆனந்த் தெரிவித்துள்ளார்.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மாநகரின் முக்கிய வணிக மையமான தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் அமைச்சர் எ. ஆனந்த் ஸ்கூட்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரைப் பார்வையிட்ட அவர், நீரை விரைந்து வெளியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அங்கிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ. ஆனந்த் கூறியதாவது,"முதலமைச்சரின் உத்தரவின்படி, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்காக 30 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் மழைநீர் சாலைகளில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தேங்கியிருக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது அத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மழைநீர் தேக்கம் தொடர்பாகப் புகார் அளித்தால், 10 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பிரச்சினையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
quick inspection scooter Minister Anand inspected rainwater accumulated Thyagaraya city