எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! புதுக்கோட்டை நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!
pudukkottai goat thieves ssi boominathan case-verdict today in pudukottai court
திருச்சி மாவட்டம் திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுட்டிருந்த போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அவர் அடையாளம் தெரியாத 3 பேர் ஆடுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தபோது சந்தேகத்தின்பேரில் அவர்களை நிறுத்த முயன்றார்.

ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதனும் இரு சக்கர வாகனத்தில் அவர்களை துரத்திய நிலையில் கீரனூர் பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரையும் பிடித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களில் 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை வெட்டிவிட்டு தப்பினர்.
மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்கள் பிடிபட்ட இடத்திற்கு வந்தபோது பூமிநாதன் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மணிகண்டன், 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட 3 பேரில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்தது. மற்றொருவர் மணிகண்டன் (19) என்பதும் அவர் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் குற்றவாளியான மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மணிகண்டனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
English Summary
pudukkottai goat thieves ssi boominathan case-verdict today in pudukottai court