சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமை - தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம் குறித்து டிரம்ப் பதிவு!
Proud to be the leader of peace Trumps post on the Thailand-Cambodia ceasefire
தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால எல்லை பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து-கம்போடியா இடையே சமீபத்தில் மோதலாக வெடித்தது. இதனால் இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இரு தரப்பிலும் 33 பேர் பலியாகி உள்ளனர். சண்டை தீவிரமானதால் எல்லை தாய்லாந்தின் சுரின் மற்றும் கம்போடியாவின் ஒடன் மின்ச்சியில் இருந்து சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில் இரு நாடுகளின் தலைவர்களிடமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோதலை தொடர்ந்தால் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படும் என அவர்களிடம் டிரம்ப் கூறியதை தொடர்ந்து முடிவில் எவ்வித நிபந்தனையுமின்றி மோதலை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தாய்லாந்து-கம்போடியா போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ள அவர், "இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்தம் மற்றும் அமைதியை எட்டியுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளோம். இப்போது ஆறு மாதங்களில் பல போர்களை முடித்துவிட்டேன் - அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 6 பெரிய போர்களை, தான் நிறுத்தி இருப்பதாக டிரம்ப் கூறினார். தான் தலையிடாவிட்டால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டு கொண்டுதான் இருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.
English Summary
Proud to be the leader of peace Trumps post on the Thailand-Cambodia ceasefire