ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் ஜனாதிபதி முர்மு: வேலூரில் உச்சக்கட்ட பாதுகாப்பு, ஹெலிகாப்டர் ஒத்திகை நிறைவு...!
President Murmu at Sripuram Golden Temple Maximum security Vellore helicopter rehearsal completed
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்க வருகை தருகிறார். இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தங்கக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் அல்லது சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்கியுள்ளார்களா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனுடன், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படையினரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான சிறப்பு குழு தங்கக்கோவில் சுற்றுப்பகுதியை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஜனாதிபதி வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீபுரம் வந்தடையும் ஜனாதிபதிக்காக, கூடுதலாக இரண்டு பாதுகாப்பு ஹெலிகாப்டர்களும் பறக்கவிடப்பட உள்ளன. அவற்றில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பயணம் செய்யவுள்ளனர். தங்கக்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைத்து சாமி தரிசனம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, மதியம் 12.30 மணியளவில் மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த நிகழ்வின்போது ஸ்ரீபுரம் – ஊசூர் சாலையில் தற்காலிக போக்குவரத்து தடை விதிக்கப்பட உள்ளது. மேலும் ஜனாதிபதி வருகையை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் நாளை காலை சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீபுரம் வர உள்ளார்.இதற்கிடையே, ஜனாதிபதி பயணத்தை முன்னிட்டு நேற்று ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வேலூர் முழுவதும் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
English Summary
President Murmu at Sripuram Golden Temple Maximum security Vellore helicopter rehearsal completed