கரண்ட் கட், செருப்பு வீச்சு, போலீஸ் தடியடி ..கொந்தளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
Power cut throwing shoes police baton furious former minister Vijayabhaskar
திமுக ஆகாயத்திலா கூட்டம் நடத்துகிறது? இறப்பில் அரசியல் செய்ய வேண்டாம் என்னும் மா.சுப்பிரமணியனுக்கு இது தெரியாதா?என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-விஷச் சாராய மரணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? விஜய் பேச ஆரம்பித்தபோது விளக்குகள் அணைந்தன. செருப்பு வீசப்படுகிறது. காவல்துறை தடியடி நடத்துகிறது.
விஜய் பேச ஆரம்பித்தபோது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனம் எப்படி வந்தது? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை நடந்தது. சாலையில் கூட்டம் நடத்தினால் ஆம்புலன்ஸ் வரும் என்கின்றனர். திமுக ஆகாயத்திலா கூட்டம் நடத்துகிறது?
விஜய் கூட்டத்தில் பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது. அதைத்தான் பழனிசாமி கூறினார். 40 ஆம்புலன்ஸ் தயார் செய்து அதில் திமுக மருத்துவ அணி என அக்கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இரவோடு இரவு வருவதையும் நிவாரணம் தருவதையும் முதல்-அமைச்சர் பெருமையாக கூறுகிறார். கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Power cut throwing shoes police baton furious former minister Vijayabhaskar