பழங்குடியின மாணவி கூட்டு பலாத்காரம்; வங்கதேசத்தில் வன்முறை வெடிப்பு: 03 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு..!
Violence erupts in Bangladesh over gang rape of tribal student
வங்கதேசத்தில் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது. இனக்கலவரம் ஏற்பட்டது. இதில் 03 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு மலைப்பகுதியான சிட்டகாங் பகுதியில், பூர்வகுடி பழங்குடியினருக்கும், வங்காள மொழி பேசும் மக்களுக்கும் இடையே நீண்டகாலமாக இனப்பிரச்சனை உள்ளது.
கடந்த 1997-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி காக்ராச்சாரி மாவட்டத்தில் 08-ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், தற்போது பெரும் இனக்கலவரமாக வெடித்துள்ளது. நேற்று முன்தினம் காக்ராச்சாரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தில் கடைகள், வீடுகள் எனப் பரவலாக தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் வன்முறை மூண்டது.
இந்த மோதல்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 13 ராணுவ வீரர்கள், 03 காவலர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.தற்போது, காக்ராச்சாரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி பழங்குடியின மாணவர் அமைப்பான 'ஜும்மா சத்ர ஜனதா' காலவரையற்ற சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கியுள்ளது.
English Summary
Violence erupts in Bangladesh over gang rape of tribal student