சந்தேகத்தின் விஷம்… நள்ளிரவில் மின்சாரம் பாய்ச்சி மனைவி கொலை...! - கணவனின் நாடக முகமூடி கிழிந்தது
poison suspicion Wife murdered by electrocution midnight husbands mask deception torn off
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (43) – கலையரசி (33) தம்பதியினர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவர்கள்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த சில காலமாக கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு முடித்துவிட்டு கலையரசி வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை 7 மணியை கடந்தும் அவர் எழுந்திருக்கவில்லை.
பலமுறை எழுப்பிப் பார்த்தும் எந்த அசைவும் இல்லாததை கண்ட கருணாகரன், இதுகுறித்து தனது மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, கலையரசி உயிரிழந்திருந்தது உறுதியானது.
மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை விசாரித்தனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், கருணாகரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கலையரசியின் கை-கால்களில் ஒயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி உயிரைப் பறித்துவிட்டு, மறுநாள் காலை உடல்நலக்குறைவால் மரணம் ஏற்பட்டதாக நாடகமாடியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் கருணாகரனை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் காட்டுக்கொல்லை கிராமம் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
poison suspicion Wife murdered by electrocution midnight husbands mask deception torn off