த.ம.மு.க தலைவர் ஜான்பாண்டியன் மகன் திருமணம்.. பா.ம.க நிறுவனர் டாக்டர் இராமதாஸ் வாழ்த்து.!!
PMK Dr Ramadoss Wish to John Pandian Son Marriage 27 August 2021
ஜான்பாண்டியன் மகன் திருமண விழாவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் மகன் மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் & செல்வி. ம.ஷாலினி இணையரின் திருமணத்திற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துக் கடிதம்: அன்புள்ள ஜான்பாண்டியன் அவர்களுக்கு, வாழ்த்துகள்!
உங்களின் அன்பு மகன் மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் & செல்வி. ம.ஷாலினி இணையரின் இல்லற இணையேற்பு விழா திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலை, அரியகுளத்தில் அமைந்துள்ள டி.இ.சி.டி கல்வி நிறுவன வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. மண விழா காணும் மணமக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் இல்லத் திருமண விழா அழைப்பிதழைக் கண்டதுமே என் மனம் காலப்பயணத்தில் பின்னோக்கி ஓடியது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக பணியாற்றியது, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த முதல் தேர்தலான 1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலும், 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டது உள்ளிட்டவை நினைவுக்கு வந்தது.

இவை அனைத்துக்கும் மேலாக உங்களுக்கும், பிரிசில்லா பாண்டியனுக்கும் இடையிலான மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்த மகிழ்ச்சியான நிகழ்வும் என் மனதில் நிழலாடின. அந்த நினைவுகளே பசுமையாக இருக்கும் நிலையில், உங்களின் மகன் மருத்துவ மேற்படிப்பு, வணிக மேலாண்மை மேற்படிப்பு ஆகியவற்றை முடித்து மணவிழா காண்பதை நினைத்துப் பார்க்கும் போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.
தங்களின் திருமணத்தைப் போலவே மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் - செல்வி. ம.ஷாலினி இணையரின் திருமணத்தையும் நானே முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்பது தான் எனது பெரு விருப்பம். அந்த தருணத்தை நான் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருந்தேன். ஆனால், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அது சாத்தியமாகவில்லை. அதனால் மணமக்களை நான் இங்கிருந்தபடியே வாழ்த்துகிறேன். மணமக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துவேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Wish to John Pandian Son Marriage 27 August 2021