டாஸ்மாக் ஊழல் குறித்த வழக்குகளைசிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
PMK Anbumani Ramadoss TASMAC Scam case CBI ED Raid DMK MK Stalin
டாஸ்மாக் ஊழல் குறித்த வழக்குகளைசிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் மது வணிக நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த இரு நாட்களாக நடத்தி வரும் சோதனைகளில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவற்றுக்கு காரணமான மூல வழக்குகளை விசாரணையின்றி ஒழித்துக்கட்ட ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கான போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தான் டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது.
மார்ச் மாதம் நடத்திய சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட பலரது வீடுகளில் மே 16 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகனுடன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் வாட்ஸ்-ஆப் மூலம் நடத்திய தகவல் பரிமாற்றத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய வேண்டும்; யாருக்கு பார் ஒப்பந்தம் வழங்க வேண்டும்; வாகன ஒப்பந்தம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அவற்றை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரும் முழுமையாக செய்து முடித்ததற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தரகர்களின் தலையீடு இருந்திருக்கிறது; ஊழல்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இவையே சான்று.
டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனரின் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தப்படும் சோதனைகளில் தொடர்ந்து பல ஆவணங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேலாண்மை இயக்குனரிடம் அமலாக்கத்துறையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது வீட்டிலும், அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிவதற்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் நிறுவனம் தான் அரசுக்கு காமதேனுவாக பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக திகழ்வது டாஸ்மாக் தான் என்பதை அண்மைக்காலமாக வெளியாகி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு மாறாக டாஸ்மாக்கை ஊழல் சுரங்கமாக மாற்றியிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்கும் நோக்குடன் அது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று மூடி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, சில வழக்குகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.
டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், டாஸ்மாக் ஊழல் வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு வழக்கு நடத்தியது. ஆனால், தமிழக அரசின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டப்பூர்வமானது தான் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. அதனால், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியில்லாததால், அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள்; அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss TASMAC Scam case CBI ED Raid DMK MK Stalin