கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் அன்புமணி இ ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.5,000 ஊதிய உயர்வு செப்டம்பர் மாத ஊதியத்தில் வழங்கப்படவில்லை. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஒரு மாதமாகியும் அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை & அறிவியல் கல்லூரிகள், 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 8,741 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அவர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும்; அது சாத்தியமாகும் வரை பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ம.க. உறுப்பினர் சிவக்குமார், கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு விடையளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்பின் ஆகஸ்ட், செப்டம்பர் என இரு மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரால் அறிவிக்கப்பட்டவாறு ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.6000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்கள், பணி செய்ய வாய்ப்புள்ள காலத்தில் பெரும்பகுதியை கவுரவ விரிவுரையாளர்களாகவே கழித்து விட்டனர். அவர்களுக்கு கடந்த காலங்களில் பணிப்பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. இத்தகைய நிச்சயமற்ற சூழலிலேயே பெரும் பகுதி பணிக்காலத்தைக் கடந்து, 45 வயதைக் கடந்து விட்ட அவர்களுக்கு பணிப்பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதது அல்ல... அவர்கள் கோருவது சலுகைகளும் அல்ல. அவை அனைத்தும் சாத்தியமாகக் கூடிய உரிமைகள் தான். கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் தொடர்பாக 28.01.2019ஆம் நாள் ஆணையிட்ட பல்கலைக்கழக மானியக் குழு, அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்பான இன்னொரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அரசு கல்லூரி நிரந்தர விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியமான ரூ.57,700 வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த ஆணைகளை அரசு செயல்படுத்தியிருந்தாலே கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறந்திருக்கும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆணைகளை தமிழகத்தை ஆண்ட அரசுகள் செயல்படுத்தவில்லை.

இந்தியாவில் பல மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்படுகிறது. கேரளம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் ரூ.50,000, பஞ்சாப் பாநிலத்தில் ரூ.57,700, புதுச்சேரியில் ரூ.40,000 வீதம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். பிற மாநிலங்களால் இந்த அளவு ஊதியம் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழக அரசால் மட்டும் இது சாத்தியமாகாதா? ஆட்சியாளர்களுக்கு அதற்கான மனம் இல்லாதது தான் இந்த சிக்கலுக்கு காரணம்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடி நீதியாக, சட்டப்பேரவையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு, அவர்களின் ஊதியம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்தவாறு அவர்களின் ஊதியம் ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் மே மாதத்தையும் சேர்த்து ஆண்டின் 12 மாதங்களும் ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணி ஓய்வின் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கவுரவ விரிவுரையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss condemn to tvk govt


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->