எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாண்டுகளுக்கும் குறைவாக காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களை மாவட்ட அளவில் நிரப்பிக் கொள்ளலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இந்த பணிகளில் சேர்வதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை நிர்ணயிப்பதில் பெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் உள்ள இந்த பணிகளுக்கு கடைசியாக 2019-ஆம் ஆண்டில் தான் ஆள்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான அறிவிக்கை 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட போது பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் கூட சில மாவட்டங்களில் மட்டும் தான் ஆள்தேர்வு நடைபெற்றதே தவிர பல மாவட்டங்களில் ஆள்தேர்வு நடைபெறவில்லை.

அதன்பின் இப்போது தான் இந்த பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறுவதாகக் கணக்கிட்டு பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 35-லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது மிகவும் சரியான நடவடிக்கை தான். இதேபோல், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 37 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பு 39ஆகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. இது பெரும் சமூக அநீதி ஆகும்.

சில மாவட்டங்களில் 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும், பல மாவட்டங்களில் அதற்கு முன்பிருந்தும் ஆள்தேர்வு நடைபெறவில்லை என்பது உண்மை. மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் 07.05.2025ஆம் நாள் எழுதிய கடிதத்தில் பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை பணியாளர் குழுவின் ஒப்புதலைப் பெற்றுத் தான் நிரப்ப வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டதாலும் பல ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசின் தவறு தான்.

அரசின் தவறுக்காக அரசு வேலை தேடும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது. எத்தனை ஆண்டுகள் பணி நியமனம் நடைபெறவில்லையோ, அத்தனை ஆண்டுகள் வயது வரம்பு விலக்கு அளிப்பது தான் இயற்கை நீதி ஆகும். அவ்வாறு செய்ய மறுப்பது வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அந்த துரோகத்தை தான் திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பட்டியலினத்தவருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதைப் போலவே பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 37 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 39ஆகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்" அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin BC MBC Job Age limit issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->