பணியிடை நீக்கப்பட்ட பெரியார் பல்கலை கழக பதிவாளருக்கு ஓய்வூதியமா?துணைவேந்தரை பணிநீக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?துணைவேந்தரை பணிநீக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறிவுள்ளதாவது :-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற முனைவர் தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பையும், உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தையும் மீறி ஓய்வுக்கால பயன்களையும், தற்காலிக ஓய்வூதியத்தையும் வழங்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பதிவாளர் பொறுப்பிலும், பேராசிரியர் பணியிலும் நீடிக்கத் தகுதியற்றவர் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அனைத்து நடைமுறைகளையும், விதிகளையும் மீறி ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவோ, ஆசிரியர் அல்லாத பணிகளிலோ இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியமும், ஒய்வுக்கால பயன்களும் வழங்கப்படுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ஓய்வு பெற்றவருக்கு எதிராக நீதிமன்றங்களில் எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது, எந்த விசாரணையும் நிலுவையில் இருக்கக் கூடாது, உள்ளாட்சித் தணிக்கைத் தடை எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது ஆகியவைவே அந்த விதிமுறைகள். முனைவர் தங்கவேலுவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு, விசாரணை, தணிக்கைத் தடை ஆகிய மூன்றும் நிலுவையில் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி முனைவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பேராசிரியர் ஓய்வு பெற்ற பிறகு அவர் குறித்த அனைத்து விவரங்களும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். அத்துறை சார்பில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளித்த பிறகு தான் ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தங்கவேலு விவகாரத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் சார்பில் இதுவரை தணிக்கை செய்யப்பட வில்லை. உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறையின் பிரதிநிதியாக பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலராக பணியாற்றிய சரவணக் குமார் என்பவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரை நெருக்கடி கொடுத்து இட மாற்றம் செய்யச் செய்து விட்டு, தற்காலிக நிதி அலுவலரை நியமித்து ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் ஏற்பாடு செய்துள்ளார். இது சட்டவிரோதம் ஆகும்.

அண்மையில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் 114-ஆம் ஆட்சிக்குழு கூட்டத்தில் தங்கவேலு ஓய்வு பெற்ற பிறகு, அவரது பணிக்கால விவரங்களை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மூலம் தணிக்கை செய்த பிறகு தான் ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால், அத்தீர்மானத்தை மதிக்காமல் முனைவர் தங்கவேலுவிடம் பிரமாணப்பத்திரம் பெற்று அவருக்கு ஓய்வுக்கால பயன்களை துணைவேந்தர் வழங்கியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

முனைவர் தங்கவேலு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை குறித்து விசாரிப்பதற்காக உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் முனைவர் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு இருமுறை ஆணையிட்டது. தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இவ்வளவுக்குப் பிறகும் அவரை பணியிடை நீக்கம் செய்யாமல் கடந்த பிப்ரவரி 29-ஆம் நாள் ஓய்வு பெற அனுமதித்த துணைவேந்தர் இப்போது ஓய்வுக்கால பயன்களையும் வழங்க ஆணையிட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்மாறன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். அவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளாகியும் இதுவரை அவருக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. இதழியல் துறைத் தலைவர் நடராசன் ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆகியும் அவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதேபோல் பலர் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஓய்வூதியம் வழங்காத துணைவேந்தர், தங்கவேலுவுக்கு மட்டும் 50 நாட்களில் ஓய்வூதியம் வழங்கி ஆணையிட்டுள்ளார். இதற்கு காரணம் துணைவேந்தர் செய்த அனைத்து விதிமீறலுக்கும் அவர் துணையாக இருந்தது தான்.

பல்கலைக்கழக விதிகளையும், தமிழக அரசின் ஆணைகளையும் மதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படுவதற்கு காரணம் தமிழக அரசின் அலட்சியம் தான். தமிழக அரசால் அமைக்கப்பட்ட பழனிச்சாமி விசாரணைக் குழுவில் துணைவேந்தர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு நினைத்திருந்தால் துணைவேந்தரை பணி நீக்கம் செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு, அந்த அறிக்கையை ஆளுனருக்கு அனுப்பி விட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது. அதனால் தான் அரசுக்கு சவால் விடும் அளவுக்கு துணைவேந்தருக்கு துணிச்சல் வந்துள்ளது.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்க வேண்டும். முனைவர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University to be dismissed Vice chancellor sacked


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->