முருகன் கோவிலில் பேரதிர்ச்சி: உண்டியலில் கைவரிசை காட்டிய அர்ச்சகர்...! - சிசிடிவியில் சிக்கிய நூதன திருட்டு
Panic at Murugan temple Priest shows off his skills money box unique theft caught CCTV
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின், உண்டியலில் இருந்து நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள நிரந்தர உண்டியலில், வழக்கமான காணிக்கை எண்ணிக்கையின் போது பண வரவு கணிசமாகக் குறைந்து காணப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கோவில் நிர்வாகத்தினர், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தனர்.அப்போது, கோவில் அர்ச்சகராக பணியாற்றி வந்த முகுந்தன் என்பவர், தனது கூட்டாளியான திருமுருகன் என்பவருடன் இணைந்து உண்டியலில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் துணி மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி, கவண் போன்ற முறையில் ஒட்டவைத்து உண்டியலுக்குள் இருந்த பணத்தை நூதனமாக வெளியில் எடுத்து திருடியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி காட்சிகள் சிசிடிவி கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தது.சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், அர்ச்சகர் முகுந்தன் மற்றும் அவரது கூட்டாளி திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 10,000 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Panic at Murugan temple Priest shows off his skills money box unique theft caught CCTV