'வழிய விடுங்கப்பா... கரும்பு வெயிட்டிங்'...! - வாகனத்தை துரத்திவிட்டு கரும்பை ருசித்த ஒற்றை யானை...!
Let me pass Sugarcane waiting lone elephant chased vehicle and tasted sugarcane
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, சாலையில் எதிர்ப்பட்ட ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷத்துடன் துரத்தியபோது, ஓட்டுநர் காரைப் பின்னோக்கி வேகமாக இயக்கி அதிலிருந்த நான்கு பேரையும் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை மிக அருகில் வந்து துரத்தியபோதும், பதற்றமடையாமல் ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தத் திகிலூட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் உள்ள சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் சீவக்காய் பள்ளம் அருகே நான்கு பயணிகளுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சாலையில் எதிர்ப்பட்டது.
எதிரே வந்த காரைக் கண்டதும் ஆவேசமடைந்த யானை, பிளிறியபடி கொம்புகளைக் காட்டி வாகனத்தை நோக்கி வேகமாக முன்னேறியது.காரை நோக்கி யானை ஆக்ரோஷமாக விரைந்து வந்ததால், உள்ளே இருந்த நான்கு பேரும் செய்வதறியாது திகைத்தனர். யானை நெருங்கி வந்த நிலையிலும், ஓட்டுநர் பதற்றத்துக்கு இடமளிக்காமல் உடனடியாகக் காரைப் பின்னோக்கி வேகமாக இயக்கினார்.
யானை தொடர்ந்து துரத்தி வந்ததால், அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவியது. இருப்பினும், ஓட்டுநரின் சமயோசிதமான செயல்பாட்டால் கார் அங்கிருந்து பின்வாங்கியது. இதனால், காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சிறிது தூரம் காரைத் துரத்தி வந்த யானை, பின்னர் அங்கிருந்த கரும்புத் துண்டுகளைக் கண்டதும் அவற்றைச் சாப்பிடத் தொடங்கியது. இதனால், காரில் இருந்தவர்கள் தப்பிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பரபரப்பான சம்பவத்தை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது கைப்பேசிகளில் காணொலியாகப் பதிவு செய்தனர். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.தாளவாடி மற்றும் திம்பம் மலைப்பாதைகளில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளுக்கு வருவது வழக்கமாகி வருகிறது.
இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.சாலையில் யானைகளைக் கண்டால் வாகனங்களை நிறுத்தி அவற்றுக்கு அருகில் செல்லவோ, ஒலி எழுப்பவோ, வாகனங்களில் இருந்து இறங்கி புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Let me pass Sugarcane waiting lone elephant chased vehicle and tasted sugarcane