பழனி கோயில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: வெள்ளத்துரை, ஜஸ்டின் மணிகண்டன் பிணை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
Palani Temple Rs 100-Crore Land Scam Supreme Court Denies Bail to Sub-Registrar Justin Manikandan Vellathurai
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்து அபகரித்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதிகளின் காட்டமான கேள்விகள்:
உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், வெள்ளத்துரை 60 நாட்களாகவும், ஜஸ்டின் மணிகண்டன் 45 நாட்களாகவும் சிறையில் இருப்பதாக வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை எவ்வாறு தனியார் பெயரில் வாங்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியதோடு, அந்நிலத்தின் சந்தை மதிப்பு குறித்து வினவினர். அதற்குத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ ஆஜராகி, "அந்நிலத்தின் உண்மையான மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் ஆகும்; ஆனால் வெறும் 2 கோடி ரூபாய்க்குப் போலி ஆவணங்கள் மூலம் கைமாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், "100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் 2 கோடிக்கு வாங்கியது மாபெரும் மோசடி இல்லையா?" என அதிர்ச்சி தெரிவித்தனர்.
புலன் விசாரணை அறிக்கை கோரிக்கை:
வழக்கின் தீவிரத்தன்மையைக் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "காவல்துறையின் புலன் விசாரணை முழுமையாக நடைபெறட்டும், அதன்பிறகே ஜாமீன் குறித்துத் தீர்மானிக்க முடியும்" எனக் கூறி, விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் விசாரணை முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தற்போதைய சூழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமர்வு, புலன் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகே மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனக் கூறி வழக்கின் விசாரணையை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது.
English Summary
Palani Temple Rs 100-Crore Land Scam Supreme Court Denies Bail to Sub-Registrar Justin Manikandan Vellathurai