அதிமுக, திமுக, தவெக அரசுகளுக்கு இதை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை - பெ.சண்முகம் சாடல்!
CPM Demonstrates Over Gem Granites Case P Shanmugam Exposes TVK Govts Attempted Closure
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ (POCSO) வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, குற்றச் செயலில் தொடர்புடைய நபர்கள் மற்றும் பின்னணியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதிபதியின் தலையீடே காரணம்:
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த விவகாரத்தை மூடிமறைக்க உயர் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், முக்கியமாகக் காவல்துறையினரும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்ததற்குப் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முகசுந்தரத்தின் துணிச்சலான நீதிமன்ற உத்தரவே முதன்மைக் காரணம். நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவாலே தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார்.
தவெக அரசின் போலித் தோற்றம் அம்பலம்:
இவ்வழக்கில் தவெக அரசு தானாக முன்வந்து நேர்மையான முறையில் நடவடிக்கை எடுப்பது போன்ற போலித் தோற்றத்தைச் உருவாக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், "கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில், தற்போதைய தவெக அரசின் காவல்துறையானது வழக்கை முற்றிலும் முடித்துக் கொள்ளும் (Closure Report) வகையில்தான் அறிக்கை தாக்கல் செய்தது. எனவே, தங்களின் நடவடிக்கையால்தான் வழக்கு தீவிரமடைந்துள்ளது என்று தவெக அரசு சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையோ, தகுதியோ இல்லை" எனத் தெளிவுபடுத்தினார்.
மூன்று ஆட்சிகளிலும் தொடரும் அலட்சியம்:
கடந்த கால அதிமுக, திமுக ஆட்சிகள் மற்றும் தற்போதைய தவெக அரசு ஆகிய மூன்று ஆட்சிக் காலங்களிலுமே இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்லது மனப்பக்குவமோ எவருக்கும் இருக்கவில்லை என்று சாடிய பெ. சண்முகம், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
English Summary
CPM Demonstrates Over Gem Granites Case P Shanmugam Exposes TVK Govts Attempted Closure