திமுக மீதான குற்றசாட்டுகளை பா.ரஞ்சித் திரும்ப பெறுவார்! அமைச்சர் உதயநிதியை டேக் செய்து போஸ் வெங்கட் போட்ட பதிவு!
Pa Ranjith DMK boss venkat tweet
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், தலித் மக்களின் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என்று திமுகவையும், அதன் தலைவர் முக ஸ்டாலினையும் நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் அவரின் அந்த பதிவில், "திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா?
அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" என்று இயக்குநர் பா.ரஞ்சித் எழுப்பி இருந்தார்.
இதற்கு திமுகவின் ஆதரவாளர்கள், திராவிடியன் ஸ்டாக் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் உள்ள பலர், ரஞ்சித் ஒரு சாதி வெறியன், தலித் மக்களை திமுகவிற்கு எதிராக மாற்ற துடிக்கிறார், ரஞ்சித் பின்னால் பாஜக உள்ளது, ரஞ்சித் ஒரு சங்கீ என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
மேலும், திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன், "திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது.
அண்ணன் ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள்.
ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கெதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா? என்று சரவணன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் ஆதரவாளரும், நடிகருமான போஸ் வெங்கட், "தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதணையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.. மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.." என்று பதிவிட்டதுடடன் அமைச்சர் உதயநிதியையும் டேக் செய்துள்ளார்.
போஸ் வெங்கட்டின் இந்த பதிவுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி, "இயக்குநர் இரஞ்சித் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கலாம். அதனைவிடுத்து, அவர் வைத்த குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறச் சொல்வது வெளிப்படையான மிரட்டல்; அச்சுறுத்தல். திமுக தனது வெளிப்படையான பாசிச முகத்தைக் காட்டத் தொடங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Pa Ranjith DMK boss venkat tweet