ஆன்லைன் காதல்... ரகசிய வீடியோ... அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்...! குமரி பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்...!
Online love Secret video horror that unfolded one after another horror that befell Kumari Plus 2 student
குமரி மாவட்டத்தில் இணையதளத்தில் ஏற்பட்ட பழக்கம் மூலம் காதல் வலையில் சிக்கிய பிளஸ்-2 மாணவி, அடுத்தடுத்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மாணவியை தனிமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை காட்சிப்பதிவு செய்து மிரட்டியதாகவும், பின்னர் மேலும் சிலர் மாணவியை கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 4 வாலிபர்களை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ்-2 படித்து வருகிறார். இணையதளத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்த அந்த மாணவி, கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு மாணவி மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, தாம் அனுபவித்த கொடுமைகள் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாணவியிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.மாணவிக்கு இணையதளம் மூலம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த அஜன் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அஜன் ஆசைவார்த்தைகள் கூறி மாணவியை பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவியை தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்ற அஜன், அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை காட்சிப்பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அந்த காட்சியை காண்பித்து, மீண்டும் தன்னுடன் வருமாறு மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதற்கு மாணவி மறுத்ததால், அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவி, தனது உறவினரான வேம்பனூரை சேர்ந்த விவேக் (32) என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். மாணவிக்கு உதவுவதாக கூறிய விவேக், அவரை நம்ப வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாணவிக்கு நேர்ந்த சம்பவங்களை தனது நண்பரான பரப்புவிளையை சேர்ந்த தினேஷ் (29) என்பவரிடம் விவேக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ், அவரது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி மாணவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய மாணவி, வீட்டில் இருந்து வெளியேறி தினேஷுடன் சென்றுள்ளார்.தினேஷ் மாணவியை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, மதுபானம் வாங்கிக் கொடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனது நண்பரான நாகர்கோவிலை சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவரிடமும் மாணவியை ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது.ஒரு வார காலமாக தொடர்ந்து கொடுமைகளை அனுபவித்த மாணவி, அங்கிருந்து தப்பித்து தனது வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி கதறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து மாணவியை காவலர்கள் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி அளித்த வாக்குமூலம் மற்றும் விசாரணையின் அடிப்படையில், அவரது காதலன் அஜன், விவேக், தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 4 பேரையும் காவலர்கள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இணையதளத்தில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறி, பின்னர் மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை வரை சென்றதாக கூறப்படும் இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Online love Secret video horror that unfolded one after another horror that befell Kumari Plus 2 student