கையூட்டு வாங்கியக் கைகளுக்குக் கம்பி எண்ணும் தண்டனை...! 10 ஆண்டுகளில் 889 அரசு அதிகாரிகளுக்குச் சிறை...!
punishment for accepting bribes harsh one 889 government officials jailed 10 years
தமிழகத்தில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சப் பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பதை ரகசியமாக கண்காணித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, கணக்கில் வராத பணம் மற்றும் லஞ்சமாக பெறப்பட்ட தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.2 கோடியே 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் குறிப்பிடத்தக்க வகையில், ரூ.1 கோடியே 87 லட்சம் லஞ்சத் தொகை இணையவழி பணப் பரிமாற்றம் மூலம் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பெறப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லஞ்சம் தொடர்பான வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது உரிய ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, குற்றம் உறுதி செய்யப்பட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நீதிமன்றங்கள் சிறை தண்டனை விதித்து வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் 73 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு லஞ்ச வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தம் 889 பேர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில், 2024-2025-ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 126 பேருக்கு லஞ்ச வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏற்பட்ட இடையூறுகளால், 2020-2021-ம் ஆண்டில் 41 பேருக்கும், 2021-2022-ம் ஆண்டில் 51 பேருக்கும் மட்டுமே லஞ்ச வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுத்தர முடிந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
லஞ்சத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் கண்காணிப்பு, திடீர் சோதனை, கைது, ஆதாரங்களை திரட்டுதல் என அடுத்தடுத்த கட்டங்களில் தீவிரம் காட்டி வரும் காவலர்கள், குற்றம் புரிந்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
English Summary
punishment for accepting bribes harsh one 889 government officials jailed 10 years