குழந்தை பிறந்தது தமிழகத்தில்... அட்ரஸ் கர்நாடகா...! காரைக்குடி தாய்க்குத் தங்க மோதிரம் மறுக்கப்பட்டது ஏன்...?
child was born Tamil Nadu address Karnataka Why gold ring denied Karaikudi mother
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கு கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக கடந்த 6 மாதங்களாக காரைக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த உமா மகேஸ்வரி, அருகில் உள்ள முத்துப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17-ந்தேதி உமா மகேஸ்வரிக்கு காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், அவரது குழந்தைக்கு மோதிரம் வழங்குவதற்காக கடந்த 1-ந்தேதி அவருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.ஆனால், உமா மகேஸ்வரி சமர்ப்பித்த ஆதார் அட்டையில் கர்நாடக மாநிலம் மைசூர் முகவரி இடம்பெற்றிருந்தது.

இதனால், அவருடைய விவரங்களை கணினியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் அவரது குழந்தைக்கு மோதிரம் வழங்கப்படவில்லை.இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், உமா மகேஸ்வரியின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரசவத்திற்காக தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்த உமா மகேஸ்வரி, செப்டம்பர் 17-ந்தேதி காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
உமா மகேஸ்வரிக்கு கர்ப்ப காலம் முதல் பிரசவம் வரையிலும் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கட்டணமின்றி வழங்கப்பட்டதாகவும், பிரசவத்துக்கு பிறகும் உரிய மருத்துவ கண்காணிப்பும் பராமரிப்பும் தொடர்ந்து அளிக்கப்பட்டதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிகிச்சை முடிந்து கடந்த செப்டம்பர் 22-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவரது ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முகவரியின் அடிப்படையில், தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் அவர் பயன்பெற இயலாது என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
child was born Tamil Nadu address Karnataka Why gold ring denied Karaikudi mother