ஆனி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம்..வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
On the eve of Aani Amavasai, the festival of lights devotees gathered at the Veeraghavaperumal temple
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.இக்கோவிலில் அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த கோவில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், ஆனி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.இதில், உற்சவர், வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோவில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு தெப்பத் திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.மூன்று முறை குளத்தை வலம் வந்த பிறகு ஆலயத்திற்கு வீரராகவர் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த ஆனி மாத தெப்பத் திருவிழாவில் திருவள்ளூர் மட்டுமல்லாது பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர்.
English Summary
On the eve of Aani Amavasai, the festival of lights devotees gathered at the Veeraghavaperumal temple