இது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா? புரோக்கரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா? - சீமான் காட்டம்.!
ntk leader seeman speech in thiruvallur election campaighn
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்மிடிப்பூண்டியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"திமுக 1000 ரூபாயை தாண்டி எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக இத்தனை கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம், என சாதனையை கூறி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. அதற்கு முன் மன்மோகன்சிங் ஆட்சியில் என்ன வளர்ச்சி கண்டது. வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா இல்லை. குழந்தை பசியுடன் தூங்கும் நாடு தான் இந்தியா. இந்தியாவை யார் ஆள்வது. சுழற்சி முறையில் ஒவ்வொரு மொழிவாரி இனத்திற்கும் 5 ஆண்டுகளுக்கும் ,பிறருக்கு ஆட்சியை கொடுப்பது தான் இறையாண்மை கொண்ட நாடாக அமையும்.

குஜராத்தியான மோடி இரண்டு முறை ஆட்சி செய்த நிலையில் மீண்டும் தேர்தலில் நிற்பது கொடுங்கோன்மைக்கு வித்திடும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. காரணமாகவே இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ந்து கிடப்பதாக உலக வங்கி கூறுகிறது. அதற்கு பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கருத்து என்ன?. மோடிக்கும், நிர்மலாவிற்கும் பொருளாதாரம் தெரியாது என அவர்களது கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமியே கூறி வருகிறார். மீண்டும் நாட்டை பாஜகவிடம் கொடுத்தால் இந்தியாவை மறந்து விட வேண்டும். வெள்ளத்தில், பேரிடர் காலத்தில் தத்தளித்த போது ஒருமுறையாவது மத்திய அரசு நிதி ஒதுக்கினார்களா?.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிறந்த மருத்துவம் அளிக்க முடியும் என்றால் அரசு மருத்துவமனைகளை பூட்டிவிடலாமே. அமைச்சருக்கோ, முதலமைச்சருக்கோ உடல்நிலை சரியில்லை எனில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள். பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என நினைத்திருத்தோம்.
ஆனால், இது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா அல்லது புரோக்கரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக அதானியும், அம்பானியும் உள்ள அதே தேசத்தில் 28 சதவீதம், உணவின்றி வாழும் மக்களும் உள்ளனர்.; பசியோடு பல குழந்தைகள் தூங்கும் நிலை உள்ளது.சொந்தமாக விமானம் இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான நிலையம்?.

ஏர்போர்ட் அமைக்க நிலம் தர மறுக்கும் மக்கள், ஏரி அமைக்க நிலம் கேட்டால் கொடுப்பார்கள் 100 நாள் வேலையில் அனைவரும் சும்மா இருக்கச் சென்று விட்டதால் அனைத்து வேலைகளுக்கும் 1.5 கோடி வட இந்தியர்கள் வந்து விட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகள் மோடியிடம் கொடுத்தால் மேலும் 1.5 கோடி வடஇந்தியர்கள் வந்து விடுவார்கள். வாழ்வுரிமை கொடுப்பது பிரச்னை இல்லை. ஆனால், வாக்குரிமை கொடுத்தால் நமது அரசியலை அவர்கள் தீர்மானிப்பார்கள்" என்று பேசியுள்ளார்.
English Summary
ntk leader seeman speech in thiruvallur election campaighn