"ஜூன் 1 முதல் புதிய சிலிண்டர் விதிமுறைகள்" பிஎன்ஜி பகுதிக்கு மாறாதவர்களின் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு ரத்தாகும்; ஓடிபி, கேஒய்சி விதிகள் கடுமை!
New LPG Cylinder Rules from June 1
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக அண்மையில் சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்தவும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறைகளில் மத்திய அரசு தற்பொழுது அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
வருகிற ஜூன் 1-ஆம் தேதி (01.06.2026) முதல், இந்தியன் (Indane), பாரத் (Bharat Gas), ஹெச்பி (HP Gas) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு, டெலிவரி மற்றும் இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்தல் உள்ளிட்ட நடைமுறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அரசின் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) திருத்தச் சட்டம் கடந்த மே 25-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திருத்தப்பட்டது. குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைப் பெறும் வீட்டு உபயோக நுகர்வோருக்குக் கூடுதல் வசதிகளை வழங்குவதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
பிஎன்ஜி (PNG) இணைப்புப் பகுதிகளுக்கான கெடு:
உங்கள் பகுதியில் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி இருந்தால், நுகர்வோர் தங்களது பழைய எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பைக் கைவிட்டு, பிஎன்ஜி வசதிக்கு மாற வேண்டும் என கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான 3 மாத காலக்கெடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. உங்கள் பகுதியில் பிஎன்ஜி வசதி இருந்தும் நீங்கள் இன்னும் அதற்கு மாறவில்லை என்றால், ஜூன் 1 முதல் உங்களது எல்பிஜி சிலிண்டர் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும் (ரத்து செய்யப்படும்).
30 நாட்கள் கால அவகாசம்:
புதிதாகப் பிஎன்ஜி (PNG) இணைப்புப் பெறும் நுகர்வோர், அந்த இணைப்புப் பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டும். எனினும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் எல்பிஜி இணைப்புக்கு மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ளும் வசதியும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு கேஸ் இணைப்பு:
'ஒரு வீட்டிற்கு ஒரு கேஸ் இணைப்பு' என்ற கொள்கையின்படி, தற்பொழுது பிஎன்ஜி (PNG) எரிவாயுவைப் பயன்படுத்தி வருபவர்கள், தங்களது வீட்டில் கூடுதலாகப் புதிய எல்பிஜி சிலிண்டருக்கு மீண்டும் விண்ணப்பிக்கவோ அல்லது பழைய சிலிண்டர்களை ரீபில் (Refill) செய்யவோ முடியாது.
சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி அதிகரிப்பு:
எரிவாயு நெருக்கடி மற்றும் தட்டுப்பாடு நிலவுவதால், ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி தற்பொழுது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி:
நகரப் பகுதிகள்: ஒரு சிலிண்டர் புக் செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
கிராமப்புறப் பகுதிகள்: அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டாய ஓடிபி (OTP) நடைமுறை:
தற்பொழுது நாட்டில் 99% சிலிண்டர் பதிவுகள் ஆன்லைன் (Online) மூலமாகவே டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, சிலிண்டர் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, சிலிண்டர் டெலிவரியின் போது நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைக் கூறினால் மட்டுமே இனி சிலிண்டர் வழங்கப்படும்.
பயோமெட்ரிக் கேஒய்சி (KYC) சரிபார்ப்பு:
வழக்கமான சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் (Black Market) சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு கேஒய்சி (KYC) விதிகள் தற்பொழுது மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமரின் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டப் பயனாளிகள் மற்றும் இதுவரை தங்களது விவரங்களைச் சரிபார்ப்பு செய்யாத இதர நுகர்வோர் அனைவரும், தங்களது பயோமெட்ரிக் (Biometric) முறை மூலமாக கேஒய்சி விவரங்களைப் புதுப்பிப்பது ஜூன் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
English Summary
New LPG Cylinder Rules from June 1