செங்கல்பட்டில் புதிய சர்வதேச நகரம் – 2,000 ஏக்கரில் உருவாகும் ‘குளோபல் சிட்டி’ பணிகள் தொடக்கம்!எப்படி அமைக்கிறது தெரியுமா?
New international city in Chengalpattu Work begins on the 2000 acre Global City Do you know how it is being built
சென்னையின் தெற்குப் பகுதியில், செங்கல்பட்டின் மதுராந்தகம் அருகே புதிய சர்வதேச நகரம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மறைமலைநகர் போல் உருவாகவுள்ள இந்த புதிய “குளோபல் சிட்டி” சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் 6 கிராமங்களை உள்ளடக்கியதாக அமையும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் நகர வளர்ச்சி நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், அதனுடன் ஒத்த நகர வளர்ச்சி மையங்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 1972ஆம் ஆண்டு மறைமலைநகர் செயற்கைக்கோள் நகரமாக உருவாக்கப்பட்டது. பின்னர் அதனை ஒட்டி மகேந்திரா சிட்டி உருவாகி தற்போது உலகத்தர தொழில் மையமாக மாறியுள்ளது.
இதே மாதிரியாக, செங்கல்பட்டின் மதுராந்தகம் பக்கத்தில் புதிய சர்வதேச நகரம் உருவாக்கப்படுகிறது. இது மறைமலைநகரிலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் 2025ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் கூடிய புதிய நகரம் உருவாக்கப்படுமென அரசு அறிவித்தது. தற்போது, திட்டத்தின் முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தொடங்கியுள்ளது.
புதிய நகரம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பழையனூர், ஜானகிபுரம், அதிமணம், படாளம், கள்ளபிரான்புரம் மற்றும் புலிப்பரக்கோவில் ஆகிய ஆறு கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 787.52 ஹெக்டேர், அதாவது சுமார் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் பழையனூரில் மட்டும் 406 ஹெக்டேரும், ஜானகிபுரத்தில் 162.65 ஹெக்டேரும் கையகப்படுத்தப்பட உள்ளது.
அந்தப் பகுதியை வழியாக தேசிய நெடுஞ்சாலை ஜிஎஸ்டி சாலை செல்கிறது. அதோடு ரயில் பாதை அருகிலேயே இருப்பதால், போக்குவரத்து வசதியிலும் இது சிறப்பான இடமாக கருதப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் இடையே உருவாகும் இந்த புதிய நகரம் பொருளாதார ரீதியாக முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நகரம் உலகத்தரத்திலான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக மற்றும் நிதி மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் சுகாதாரச் சேவை மையங்கள் என பல துறைகள் ஒரே இடத்தில் இணைந்து இயங்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்படுகிறது.
அரசு தரப்பில், இது உயர் வருமான மக்களுக்கான நகரம் மட்டும் அல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற வசதிகளுடன் கூடிய நவீன நகரமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய குளோபல் சிட்டி உருவானால், மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டிக்கு அடுத்ததாக செங்கல்பட்டு–மதுராந்தகம் பகுதி தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உருவெடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
New international city in Chengalpattu Work begins on the 2000 acre Global City Do you know how it is being built