துண்டிக்கப்பட்ட இளைஞரின் மணிக்கட்டு.. 10 மணி நேர போராட்டம்... மீண்டும் பொருத்தி சாதித்த அரசு மருத்துவர்கள்!
nellai Govt hospital manikattu surgery
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் அரிதான சாதனை படைத்துள்ளனர். தகராறில் துண்டிக்கப்பட்ட இளைஞரின் மணிக்கட்டை 10 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொருத்தி உயிர்ப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரியைச் சேர்ந்த பிச்சை இசக்கி (21) என்ற இளைஞர், ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த கோயில் கொடை விழா தகராறில் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவரது இடது கை மணிக்கட்டில் வெட்டப்பட்டு பிரிந்தது.
உடனே அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல், போலீஸார் களத்தில் கிடந்த அவரது துண்டிக்கப்பட்ட கையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில், முதலில் எலும்பியல் துறை மருத்துவர்கள் எலும்புகளை இணைத்தனர். பின்னர் பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர்கள் நுண்ணோக்கியின் உதவியுடன் ரத்த நாளங்கள், நரம்புகள், தசைகள் ஆகியவற்றை துல்லியமாக மீண்டும் இணைத்து கையின் இயங்கும் திறனை மீட்டனர்.
இந்த சிகிச்சையை பிளாஸ்டிக் சா்ஜரி துறை மருத்துவர்கள் அகமது மீரான், பாலாஜி, சூர்யா சர்மா, ராஜா, கோகுல், பால் வின்சென்ட், எலும்பியல் துறை பேராசிரியர் செல்வராஜன், உதவி மருத்துவர் அறிவு, மயக்கவியல் நிபுணர்கள் சௌந்தரி, லீலா மற்றும் செவிலியர்கள் அனிதா, ஜான்சிராணி ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
மிகுந்த நுட்பமும் ஒற்றுமையும் கொண்ட இந்த மருத்துவக் குழுவை, மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் பாராட்டியுள்ளார்.
English Summary
nellai Govt hospital manikattu surgery