தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நர்சை காப்பாற்ற பேச்சுவார்த்தை...வெளிவந்த முக்கிய தகவல்!
Negotiations to save the nurse sentenced to death Important information revealed
ஏமனில் தூக்குத்தண்டனை எதிர்கொள்கின்ற நர்ச் நிமிஷா பிரியாவை காப்பாற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கணவர் டோமி தாமஸ் பேட்டி அளித்துள்ளார்.
ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நர்ச் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சிகள் பல்வேறு தளங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமனில் நர்சாக பணியாற்றி வந்தபோது, அதே நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்தநாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது கணவர் டோமி தாமஸ் ஊடகங்களிடம் பேசியதாவது:“என் மனைவி நிமிஷா பிரியாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நிலைகளில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:“நிமிஷாவின் தாயார் பிரேமகுமாரி, கவர்னருடன் வீடியோ கால் மூலமாக பேசினார். கவர்னர் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அவர்மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட், ஜூலை 14-க்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.”
“நிமிஷாவை காப்பாற்ற பலரும் நிதி உதவிக்கு முன்வந்துள்ளனர். மரணம் அடைந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் ஒத்துழைத்தால், நிதி மூலம் அவர்களை சமாதானப்படுத்தும் வாய்ப்பு உள்ளது” என்றும் டோமி தாமஸ் தெரிவித்தார்.
நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சிகள் தீவிரம் பெறும் நிலையில், மக்களிடையே ஏதோ ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
English Summary
Negotiations to save the nurse sentenced to death Important information revealed