திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி, சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வெற்றிக்காக உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தல்..!
Chief Minister MK Stalin meets with DMK constituency executives from Dindigul Vedasandur and Veppanahalli
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக தொகுதி நிலவரம், உறுப்பினர் சேர்க்கை குறித்து, திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து உரையாடினார்.
இதில், ஒரு பகுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உடன் பிறப்பே வா” என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த 13-ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசியுள்ளார். இதில் 03 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓய் பிரகாஷ் கலந்து கொண்டனர்.
அவர்களை தனித்தனியாக அழைத்துபேசிய ஸ்டாலின் அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மணி நேரம் என, சுமார் 03 மணி நேரத்துக்கும் மேலாக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளார். அப்போது, சட்டப்பேரவை தொகுதி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை பட்டியலை வைத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டியுள்ளார்.
அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்கி, திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளார். அத்துடன், கட்சி பணியில் சுணக்கம் காட்டுபவர்கள், மெத்தன போக்குடன் செயல்படுவர்களை கண்டித்துள்ளார். மேலும், கட்சி பணிகளில் சுணக்கம் காட்டினால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த தேர்தலை விட, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றுமையுடன் பணியாற்றி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin meets with DMK constituency executives from Dindigul Vedasandur and Veppanahalli