''தமிழகத்தில் பால், மின்சாரத்துக்கு தட்டுப்பாடு, ஆனால் கஞ்சா தட்டுப்பான்றி விற்பனை''; நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!
Nainar Nagendran criticizes the situation in Tamil Nadu noting shortages of milk and electricity while ganja is sold without any scarcity
பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது;
பிரதமர் மோடியின் பிறந்த நாளை சேவை மாதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். அதன்படி ஏழை, எளிய மக்களுக்கும், பள்ளி அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து குறுகிய காலத்திலேயே இடைத்தேர்தல் நடைபெறுவது தேவையா? என்றும், ஏற்கெனவே வெற்றி பெற்று பின்னர் பதவி விலகிய அதே வேட்பாளர்கள் தற்போது தவெக சார்பில் போட்டியிடுகிறார்கள். இதனால் அரசுக்கு வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக சுமத்தியுள்ளார்.

அத்துடன், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தவெக தேர்தலின் போது அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை என்றும், தமிழகத்தில் பால் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு பிரச்சினைகள் நிலவுகின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பால், மின்சாரம் தட்டுப்பாடு நிலவும் நிலையில் கஞ்சா தட்டுப்பான்றி விற்பனை செய்யப்படுகிறதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேப்போன்று, தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து கேட்டால் மற்ற மாநிலங்களில் நிலவும் மின்தட்டுப்பாடு குறித்து அமைச்சர்கள் பேசுகிறார்கள். சட்டப்பேரவையில் மதம் சார்ந்து பேசியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற ஆட்சி என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்தவர்கள் தற்போது அக்கட்சியின் தலைமை சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக கூறி விலகுவது ஏற்புடையதல்ல என்றும், இத்தனை ஆண்டுகள் அந்த கட்சியில் இருந்தபோது சந்தர்ப்பவாதம் தெரியவில்லையா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், வரும் செப்.26 மற்றும் 27-ஆம் தேதிகளில் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், தொடர்ந்து தாராபுரத்திலும் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும், திட்டமிடப்படாத அறிவிப்புகள் அதிகமாக வெளியிடப்படுகின்றன. சில அறிவிப்புகள் பின்னர் மாற்றப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
அரசின் ஒப்பந்தப் பணிகள் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், மத்தியில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சொல்லும் கட்சியின் இன்றைய நிலைமையையும், அப்போது இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுக இப்போது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
'சிஎம் 2031' என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் திருமாவளவன் வந்தது பேசுபொருளாகி உள்ளதாகவும், நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அந்தக் காரில் உள்ளதை நம்பர் பிளேட்டாக மட்டுமே பார்க்கிறேன் என்று நயினார் பதில் அளித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran criticizes the situation in Tamil Nadu noting shortages of milk and electricity while ganja is sold without any scarcity